tamil

பள்ளி, கல்லூரிகள் வழக்கமாக இன்று இயங்கும்...

webdesk | Monday, January 23, 2017 9:13 AM IST

'ஜல்லிக்கட்டுக்கான தடை விலகியதால், பள்ளிகள், கல்லுாரிகள் இன்று இயங்கும்; பள்ளி வாகனங்களும் இயங்கும்' என, அறிவிக்கப்பட்டுஉள்ளது.

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான போராட்டம் காரணமாக, ஜன., 20ல், பள்ளிகள், கல்லுாரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது; தனியார் பள்ளிகளும் விடுமுறை அறிவித்தன. இந்நிலையில், இன்று அனைத்து அரசு பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளி கள் இயங்கும் என, பள்ளி கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு தனியார் பள்ளிகள் கூட்டமைப்பு தலைவர் மார்டின் கென்னடி மற்றும் தமிழ்நாடு தனியார் நர்சரி, பிரைமரி மெட்ரிக் பள்ளிகள் சங்க பொதுச்செயலர், நந்தக்குமார் கூறுகையில், 'பிளஸ் 2 மற்றும், 10ம் வகுப்பு தேர்வுகளுக்கு குறைந்த நாட்களே உள்ளன. எனவே, தனியார் பள்ளிகள், இன்று முதல் வழக்கம் போல இயங்கும்' என்றனர்.

தமிழ்நாடு தனியார் பள்ளி வாகன கூட்டமைப்பு நல சங்க தலைவர், வி.வைரசேகர் கூறுகையில், ''அனைத்து பள்ளிகளும், இன்று வழக்கம் போல இயங்க உள்ளன. அதனால், எங்கள் வாகனங்கள் வழக்கம் போல, மாணவர்களை, பள்ளிகளுக்கு அழைத்து செல்லும்,''என்றார்.கல்லுாரிகளும் இன்று மீண்டும் திறக்கப்படுகின்றன.

கல்லுாரி கல்வி இயக்குனர் மஞ்சுளா கூறுகையில், ''ஆண்டுக்கு, 180 நாட்கள் கல்லுாரிகள் இயங்க வேண்டும்.அந்த வகையில், இன்று அந்தந்த பகுதி நிலைமைக்கு ஏற்ப, கல்லுாரிகள் இயங்கும். கல்லுாரி முதல்வர்களே, இது தொடர்பாக முடிவு செய்து கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது,' 'என்றார்.அரசு பள்ளிகளைப் பொறுத்தவரை, ஜல்லிக்கட்டு பிரச்னைக்காக, விடுமுறையே அறிவிக்கவில்லை. எனவே, வழக்கம் போல பள்ளிகள் இயங்கும் என, அதிகாரிகள் தெரிவித்தனர்.