tamil

தமிழகம்-புதுச்சேரியில் பிளஸ்-2 பொதுத்தேர்வு இன்று துவக்கம்!

Webdesk | Friday, March 1, 2019 8:11 AM IST

2018-19-ம் கல்வி ஆண்டுக்கான பிளஸ்-2 பொதுத்தேர்வு  இன்று (வெள்ளிக்கிழமை) தொடங்கி வருகிற 19-ந் தேதி வரை நடக்கிறது. பிளஸ்-2 பொதுத்தேர்வை தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மொத்தம் 7 ஆயிரத்து 82 பள்ளிகளிலிருந்து 8 லட்சத்து 61 ஆயிரத்து 107 மாணவர்கள் மற்றும் பழைய நடைமுறையில் (ஒரு பாடத்துக்கு 200 மதிப்பெண்கள் என மொத்தம் 1,200 மதிப்பெண்கள்) 25 ஆயிரத்து 741 தனித்தேர்வர்களும், புதிய நடைமுறையில் (ஒரு பாடத்துக்கு 100 மதிப்பெண்கள் என மொத்தம் 600 மதிப்பெண்கள்) 1,144 தனித்தேர்வர்கள் என மொத்தத்தில் 8 லட்சத்து 87 ஆயிரத்து 992 பேர் தேர்வு எழுத உள்ளனர்.

பள்ளி மாணவிகள் 4 லட்சத்து 60 ஆயிரத்து 6 பேர். மாணவர்கள் 4 லட்சத்து ஆயிரத்து 101 ஆகும். மாணவர்களை விட மாணவிகள் எண்ணிக்கை 58 ஆயிரத்து 905 அதிகம் ஆகும். தனித்தேர்வர்களில் 8 ஆயிரத்து 855 பெண்களும், 18 ஆயிரத்து 28 ஆண்களும், 2 திருநங்கைகளும் தேர்வு எழுதுகிறார்கள்.சென்னையில் 408 பள்ளிகளில் இருந்து 158 தேர்வு மையங்களில் மாணவிகள் 26 ஆயிரத்து 285 பேரும், மாணவர்கள் 23 ஆயிரத்து 134 பேரும் என மொத்தம் 49 ஆயிரத்து 419 பேர் எழுத உள்ளனர். புதுச்சேரியில் 150 பள்ளிகளிலிருந்து 40 தேர்வு மையங்களில் மொத்தம் 15 ஆயிரத்து 408 மாணவ-மாணவிகள் தேர்வு எழுதுகிறார்கள்.

தமிழகம் மற்றும் புதுச்சேரி முழுவதுமாக பிளஸ்-2 பொதுத்தேர்வுக்கு என 2 ஆயிரத்து 944 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த ஆண்டு மட்டும் 150 புதிய தேர்வு மையங்கள் கூடுதலாக அமைக்கப்பட்டு உள்ளன.தமிழ் வழியில் படித்து தேர்வு எழுதும் மாணவர்களுக்கு தேர்வு கட்டணத்தில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டு உள்ளது. அந்த வகையில் இந்த ஆண்டு 5 லட்சத்து 13 ஆயிரத்து 884 பேர் தமிழ் வழியில் படித்து தேர்வு எழுத உள்ளனர்.

மதுரை, வேலூர், கடலூர், சேலம், கோவை, பாளையங்கோட்டை, திருச்சி மற்றும் புழல் சிறைகளிலுள்ள 45 ஆண் கைதிகள் புழல் சிறையில் அமைக்கப்பட்டுள்ள தேர்வு மையத்தில் தேர்வு எழுதுகிறார்கள்.