ஆசிரியர்கள் மீது பாலியல் புகார் வந்தால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.ஈரோடு அருகே பெரியசேமூர் ஈபிபி. நகரில் புதிதாகரூ.59 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், சுற்றுச்சூழல்துறை அமைச்சர் கருப்பணன் ஆகியோர் நேற்று திறந்து வைத்தனர்.
இதையடுத்து அமைச்சர் செங்கோட்டையன் நிருபர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் பாலித்தீன் பயன்படுத்துவதில்லை என்ற சூளுரை மூலமாக இந்தியாவிலேயே தமிழகம் முன்னணி மாநிலமாக இருக்கும். சிறப்பாக பணியாற்றாத பெற்றோர்ஆசிரியர் கழகங்களை உடனடியாக மாற்றி விட்டு சிறந்த முறையில் செயல்பட்டு வரும் பெற்றோர் ஆசிரியர் கழகத்தை ஊக்குவிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
அரசின் கொள்கை முடிவுப்படி எந்த பள்ளியையும் மற்றொரு பள்ளிக்கு மாற்ற எந்த பரிசீலனையும் கிடையாது. போராட்டம் நடத்துவோம் என்று கூறுகிறவர்கள் குறைவான எண்ணிக்கையில் உள்ள பள்ளிகளுக்கு மாணவர்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்த ஆலோசனை கூறலாம். அங்கன்வாடியில் இருக்கும் குழந்தைகளை அரசு பள்ளியில் இணைக்கும் நோக்கம் கிடையாது.
தமிழகத்தை பொறுத்தரை 3 லட்சத்து 20 ஆயிரம் ஆசிரியர்கள் பணியாற்றி வருகிறார்கள். ஒரு சில ஆசிரியர்கள் மீது பாலியல் புகார் வந்தால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.சம்பந்தப்பட்ட ஆசிரியர் மீது போலீசார் மூலமாக வழக்குப்பதிவு செய்து கைது நடவடிக்கை எடுத்து வருகிறோம். இவ்வாறு அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.