tamil

அரசு பள்ளிகளில் ஜனவரி மாதம் முதல் எல்.கே.ஜி வகுப்புகள் தொடங்க நடவடிக்கை!

Webdesk | Monday, December 17, 2018 5:33 PM IST

அரசு பள்ளிகளில் ஜனவரி மாதம் முதல் எல்.கே.ஜி., யு.கே.ஜி. வகுப்புகள் தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார். பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் இன்று காலையில் காஞ்சிபுரம் வந்தார். அங்குள்ள காமாட்சி அம்மன் கோவிலுக்கு சென்று சாமி கும்பிட்டார். பின்னர் காஞ்சி சங்கர மடத்திற்கு சென்ற அவர் விஜயேந்திரரை சந்தித்து பேசினார். அதனை தொடர்ந்து வழக்கருத்தீஸ்வரர் கோவிலுக்கு சென்று வழிப்பட்டார்.

பின்னர் செங்கோட்டையன் நிருபர்களிடம் கூறியதாவது:-

முதல்-அமைச்சரும், துணை முதல்-அமைச்சரும் இணைந்து பணியாற்றி வருவதன் மூலம் அனைத்து துறைகளும் மற்ற மாநிலங்களுக்கு முன்னோடியாக விளங்கி வருகிறது.கஜா புயல் பாதித்த மாவட்டங்களில் அரசு எடுத்த நடவடிக்கை, நடந்த நிவாரணப் பணிகள் பாராட்டும்படி இருந்தன. தமிழகத்தில் 11, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு 11 லட்சத்து 17 ஆயிரம் இலவச சைக்கிள் வழங்கும் திட்டம் நடைபெற்று வருகிறது.

பள்ளி மாணவர்களுக்கு 14 வகையான இலவச திட்டங்களை அரசு வழங்கி வருகிறது.அரசு பள்ளிகளில் ஜனவரி மாதம் முதல் எல்.கே.ஜி., யு.கே.ஜி. வகுப்புகள் தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஏழை மாணவர்களின் பெற்றோர்களின் ஆங்கில வழி கல்வி ஆசை இதன் மூலம் நிறைவேறும்.தனியார் பள்ளிகளுக்கு இணையாக அரசு பள்ளிகளை கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.