தமிழக பள்ளிக் கல்வித்துறையின் சார்பில் அமைக்கப்பட்டுள்ள 412 இலவச நீட் பயிற்சி மையங்கள் சனிக்கிழமை முதல் தொடங்கவுள்ளன. இம்மையங்களில் பின்பற்றப்பட வேண்டிய நடைமுறைகள் குறித்த வழிகாட்டுதல்களை பள்ளிக் கல்வித்துறை வெளியிட்டுள்ளது.பிளஸ் 2 முடித்த மாணவர்களுக்காக மத்திய அரசு மருத்துவத்துக்கு நீட், பொறியியல் படிப்புக்கு ஜே.இ.இ ஆகிய தேர்வுகளை நடத்துகிறது. இந்தத் தேர்வுகளில் சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தில் பயின்ற ஆந்திரா, கேரளா, தெலங்கானா, வடமாநில மாணவர்கள் அதிகம் தேர்ச்சி பெறுகின்றனர்.
இதைக் கருத்தில் கொண்டு தமிழக அரசின் பள்ளிக் கல்வித்துறை கடந்த ஆண்டு முதல் ஒரு ஒன்றியத்துக்கு ஒரு இலவச நீட் பயிற்சி மையம் வீதம் மொத்தம் 412 மையங்களைத் தொடங்கியது. இதன் மூலம் அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகளில் பிளஸ் 2 படிக்கும் மாணவர்கள், விருப்பமுள்ள மாணவர்கள் என 75 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் பயிற்சி பெற்றனர்.வி-சாட் தொழில்நுட்பத்தில்... இந்த ஆண்டுக்கான இலவச நீட் பயிற்சிக்கான அறிமுக வகுப்புகளை திருநெல்வேலி பாவூர்சத்திரம் அவ்வையார் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் கடந்த 7-ஆம் தேதி அமைச்சர் செங்கோட்டையன் தொடங்கி வைத்தார்.
இதைத் தொடர்ந்து சனிக்கிழமை (செப்.15) முதல் 412 மையங்களிலும் வி-சாட் தொழில்நுட்பத்தில் இணைய வழியில் ஸ்பீடு' அகாதெமியின் சார்பில் பயிற்சி வகுப்புகள் நடைபெறவுள்ளன.இதற்கான கால அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. இலவச நீட் பயிற்சி மையங்கள் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 9.30 மணி முதல் மாலை 4.30 மணி வரை நடத்தப்பட வேண்டும். பயிற்சி மையங்களில் மாணவர்களின் வருகைப் பதிவேடு, மதிப்பெண் பதிவேடு ஆகியவற்றை முறையாகப் பராமரிக்க வேண்டும். ஒரு மையத்துக்கு ஒரு நாளைக்கு 5 பாட ஆசிரியர், ஒரு பொறுப்பாசிரியர் என மொத்தம் 6 ஆசிரியர்கள் மட்டுமே வருகைப் பதிவேட்டில் கையெழுத்திட வேண்டும்.
இந்த மையங்களை ஒவ்வொரு வாரமும் முதன்மைக் கல்வி அலுவலர், ஆர்எம்எஸ்ஏ உதவித் திட்ட அலுவலர்கள் பார்வையிட்டு அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும்.
பயிற்சிக்கு வருகை தரும் மாணவர்களுக்கு (இருபாலருக்கும்) தனித்தனியாகக் கழிப்பிட வசதி, குடிநீர் வசதி செய்யப்பட வேண்டும்.பயிற்சி மையங்களில் பயிற்சி வகுப்புகளுக்கான வி-சாட் தொடர்பு கிடைத்துள்ளதா என்பதை இணைப்பில் உள்ள உதவி மைய எண்களைத் தொடர்பு கொண்டு உறுதி செய்து கொள்ளுமாறு அனைத்து மைய ஒருங்கிணைப்பாளர்களும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இது வி-சாட் முறையில் முதல் வகுப்பு என்பதால் தொடர்பு கிடைக்காத மையங்களில் எந்தவித குறைபாடுகளும் இல்லாமல் இந்தப் பயிற்சி நேரடி வகுப்புகளாக நடத்தப்பட வேண்டும்.