'மாநிலம் முழுவதும், 7,000 அரசு பள்ளிகளில், 'டிஜிட்டல்' வகுப்பறைகள் அமைக்கப்படும்,'' என, பள்ளி கல்வித்துறை முதன்மை செயலர், பிரதீப் யாதவ் கூறினார்.
சென்னை, அரும்பாக்கம், அரசு மேல்நிலைப் பள்ளியில், டிஜிட்டல் வகுப்பறை அமைக்கப்பட்டுள்ளது.
இதை, பிரதீப் யாதவ் திறந்து வைத்தார்.நிகழ்ச்சியில், அவர் பேசியதாவது: மாநிலம் முழுவதும், ஒவ்வொரு பள்ளிக்கும் தேவையான, அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்படுகின்றன. இதற்கு, பல்வேறு தன்னார்வ அமைப்புகளும், முன்னாள் மாணவர்களும், நிதி உதவி செய்கின்றனர். இந்த பள்ளியில், தமிழ்நாடு அறக்கட்டளை வாயிலாக, 30 லட்சம் ரூபாய் செலவில், டிஜிட்டல் வகுப்பறை அமைக்கப்பட்டுள்ளது. இதில், 35 கணினிகள் வழியாக, மாணவர்களுக்கு பாடம் கற்பிக்கும் வசதி செய்யப்பட்டுஉள்ளது.
மாநிலம் முழுவதும், 7,000 அரசு பள்ளிகளில், மத்திய அரசின் திட்டத்தில், டிஜிட்டல் வகுப்பறைகள் அமைக்கப்பட உள்ளன. புதிய பாடத்திட்ட புத்தகங்களில், 'க்யூ.ஆர்.கோடு' முறை உள்ளது. இதை பயன்படுத்தி, 'வீடியோ' வழியாக, மாணவர்கள் பாடங்களை படிக்கலாம்.இவ்வாறு அவர் பேசினார்.இந்நிகழ்ச்சியில்,பள்ளி கல்வி இயக்குனர், ராமேஸ்வர முருகன், சென்னை மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி, திருவளர்செல்வி, பள்ளிதலைமை ஆசிரியர் சேகர் ஆகியோர் பங்கேற்றனர்.