university

அண்ணாமலைப் பல்கலை.யில் அம்பேத்கர் இருக்கை தொடக்கம்!! 

S.Ashok Kumar | Friday, December 30, 2016 7:24 PM IST

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் அம்பேத்கர் இருக்கை தொடக்க விழா வியாழக்கிழமை நடைபெற்றது. மேலும், அம்பேத்கரின் 61-ஆவது நினைவு நாள் கடைப்பிடிக்கப்பட்டது.
 நிகழ்ச்சியில், பல்கலைக்கழக மேலாண்மைத் துறை பேராசிரியர் என்.பஞ்சநதம் வரவேற்றார். அம்பேத்கர் உருவப் படத்துக்கு மலர்தூவி மரியாதை செலுத்தப்பட்டது. பல்கலைக்கழக துணை வேந்தர் செ.மணியன் குத்துவிளக்கேற்றி அம்பேத்கர் இருக்கையை தொடக்கி வைத்தார். புதுச்சேரி அரசின் உள்ளாட்சித் துறை இயக்குநர் முகமது மன்சூர்
 ஆற்றிய சிறப்புரையில், பண மதிப்பிழப்பை ஒவ்வொரு 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை செய்ய வேண்டும் என அம்பேத்கர் பல ஆண்டுகளுக்கு முன்பே கூறியுள்ளதாகக் குறிப்பிட்டார்.
 துணைவேந்தர் செ.மணியன் பேசுகையில், வெளிநாடு வாழ் இந்தியர்களின் மனித உரிமைகள் மீதான பிரச்னைகள் குறித்து, இந்த இருக்கை மூலம் அவர்களை ஒன்றிணைத்து ஆராய வேண்டும் என்றார். மொழிப்புல முதல்வர் வி.திருவள்ளுவன், கலைப்புல முதல்வர் எம்.நாகராஜன் ஆகியோர் வாழ்த்துரையாற்றினர். பதிவாளர் ஆறுமுகம் முதன்மை உரையாற்றினார். மேலாண்மைத் துறை முனைவர் எஸ்.சமுத்திரராஜகுமார் நன்றி கூறினார்.
 நிகழ்ச்சியில், புல முதல்வரகள், துறைத் தலைவர்கள், பேராசிரியர்கள் மற்றும் மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். ஏற்பாடுகளை அம்பேத்கர் இருக்கை பேராசிரியர் க.செளந்திரராஜன், முனைவர் வீ.ராதிகாராணி ஆகியோர் செய்தனர்.