university

அண்ணா பல்கலை. இணைப்பு அந்தஸ்து: விண்ணப்பிக்க இன்று கடைசி

webdesk | Friday, January 13, 2017 11:11 AM IST

பொறியியல் கல்லூரிகள் பல்கலைக் கழக இணைப்பு அந்தஸ்தைப் புதுப்பிக்க விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் வெள்ளிக்கிழமையுடன்(ஜன.13)முடிவடைய உள்ளது.
தமிழகத்தில் உள்ள 500 -க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகள் ஒவ்வொரு ஆண்டும் அண்ணா பல்கலைக்கழகத்திடம் விண்ணப்பித்து பல்கலைக்கழக இணைப்பு அந்தஸ்தைப் புதுப்பித்துக் கொள்ள வேண்டும். அதன்படி, 2017 -18 கல்வியாண்டுக்கு புதுப்பித்தலுக்கான விண்ணப்பத்தை கடந்த மாதம் முதல் பல்கலைக்கழகம் பெற ஆரம்பித்தது. இந்த நடைமுறையில் வெளிப்படைத் தன்மையை உறுதிப்படுத்தும் வகையில், முதன்முறையாக ஆன்லைனில் விண்ணப்பித்தல் முறையை பல்கலைக் கழகம் இந்த ஆண்டு அறிமுகம் செய்தது.
விண்ணப்பிக்க ஜனவரி 6 கடைசித் தேதி என முன்பு அறிவிக்கப்பட்டது. பின்னர், வர்தா புயல் உள்ளிட்ட காரணங்களால் ஜனவரி 13 வரை நீட்டிக்கப்பட்டது. அதன்படி, பல்கலைக் கழக இணைப்பு அந்தஸ்தைப் புதுப்பிக்க விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் வெள்ளிக்கிழமையுடன் முடிவடைகிறது.