tamil

26,000 ஆசிரியர்கள் தகுதியில்லாதவர்கள்! மத்திய அமைச்சகத்தின் அதிர்ச்சி ரிப்போர்ட்!

Webdesk | Saturday, December 9, 2017 8:27 AM IST

ஆசிரியர் பணிக்கு, பட்டயப் பயிற்சி அல்லது பி.எட். படித்தவர்களையே நியமிக்க வேண்டும். தனியார் பள்ளிகளில், பன்னிரண்டாம் வகுப்பு முடித்தவர்களையும் பட்டப்படிப்பு முடித்தவர்களையும் வேலைக்குச் சேர்த்திருக்கிறார்கள். இவர்கள் தகுதிநிலை பெறுவதற்கு உதவியாக, தேசிய திறந்தநிலைக் கல்வி வாரியம் நடத்தும் இரண்டு ஆண்டுக்கான டிப்ளோமா பயிற்சியில் கலந்துகொண்டு தேர்ச்சிபெற வேண்டும். இந்தப் பயிற்சிக்கு, தமிழ்நாட்டிலிருந்து 25,929 ஆசிரியர்கள் பதிவுசெய்திருக்கின்றனர். தெலங்கானாவில் 17,812 பேரும் கர்நாடகாவில் 5,175 பேரும் கேரளாவில் 705 பேரும் பயிற்சி பெற பதிவுசெய்துள்ளனர். தமிழ்நாட்டில் சென்னையில் 3,696 பேர், கோவையில் 3,441 பேர், திருவள்ளூர் மாவட்டத்தில் 2,804 பேர் பதிவுசெய்திருக்கின்றனர்.

கல்வி உரிமைச் சட்டத்தின்படி பள்ளியில் உள்ள அனைத்து ஆசிரியர்களும் தகுதியானவர்களாக இருக்க வேண்டும். ஆனால், நாடு முழுவதும் முழுமையான தகுதி பெறாத ஆசிரியர்கள் அதிக அளவில் இருக்கிறார்கள். இவர்களின் தகுதிநிலையை உயர்த்தும் நோக்கில், மத்திய மனிதவளத்துறை தேசிய திறந்தநிலைக் கல்வி வாரியத்தின் மூலம் ஆன்லைன் வழிப் பயிற்சிக்கு ஏற்பாடு செய்திருக்கிறது.

பயிற்சியில் கலந்துகொள்ளும் ஆசிரியர்களுக்கு உதவியாக, பாடங்களும் வீடியோக்களும் ஆன்லைனில் பதிந்துவைத்திருக்கின்றனர். இரண்டு ஆண்டு பயிற்சியில், முதலாம் ஆண்டு ஐந்து பாடங்களும், இரண்டாம் ஆண்டில் நான்கு பாடங்களும் என, மொத்தம் ஒன்பது பாடங்கள் இருக்கின்றன. இந்தப் பாடங்களில் ஆரம்பக் கல்வி முறைகள், குழந்தைகளின் உளவியல், குழந்தைகளின் வளர்ச்சி மற்றும் மேம்பாடு, கற்றல் முறைகள் போன்றவை சொல்லிக்கொடுக்கப்படும். இந்தப் பாடங்களைப் படிக்கும் ஆசிரியர்கள் நேரடியாகப் பள்ளியில் நடைமுறைப்படுத்திப் பார்க்கலாம். பயிற்சிக்குப் பிறகு எழுத்துத் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்.

தேசிய திறந்தநிலைக் கல்வி அமைப்பு நடத்தும் பயிற்சியில் கலந்துகொள்ள, இந்தியா முழுவதும் பதினான்கு லட்சம் பேர் (14,02,962) பதிவுசெய்திருக்கின்றனர். பீகாரில் 2.82 லட்சம் பேர், உத்தரப்பிரதேசத்தில் 1.82 லட்சம் பேர், மேற்குவங்கத்தில் 1.77 லட்சம் பேரும் பதிவுசெய்திருக்கிறார்கள். இந்த மாநிலங்களுடன் ஒப்பிடும்போது தமிழ்நாட்டில் தகுதி குறைந்த ஆசிரியர்களின் எண்ணிக்கை குறைவுதான்.

பட்டப்படிப்புடன் பி.எட் பட்டம் பெற்றவர்கள், நடுநிலை மற்றும் உயர்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு மட்டும் வகுப்பெடுக்க வேண்டும். இவர்கள் நர்சரி மற்றும் ஆரம்பப் பள்ளி மாணவர்களுக்குப் பாடம் நடத்துபவராக இருந்தால், ஆறு மாதகால அளவிலான பயிற்சியைக் கட்டாயம் பெற்றிருக்க வேண்டும்' என்கிறது மனிதவளத் துறை. இந்தப் பயிற்சியையும் தேசிய திறந்தநிலைக் கல்வி வாரியமே நடத்துகிறது. இந்தப் பயிற்சியில் சேர, இம்மாதம் 15-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு www.nios.ac.in  என்ற இணையதள முகவரியை அணுகவும்.