tamil

TNPSC - அரசு தேர்வு பணிகளை தனியாரிடம் ஒப்படைக்க நிர்வாகம் முடிவு!

Webdesk | Thursday, July 5, 2018 2:56 PM IST

TNPSC - அரசு தேர்வு பணிகளை தனியாரிடம் ஒப்படைக்க நிர்வாகம் முடிவு!

அரசின் இந்த முடிவால் தேர்வர்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) மாநில அளவில் நிர்வாகத்தில் மாவட்ட துணை கலெக்டர், காவல்துறை துணை கண்காணிப்பாளர்(டிஎஸ்பி), வணிக வரித்துறை உதவி ஆணையர், மாவட்ட பதிவாளர், மாவட்ட வேலை வாய்ப்பு அதிகாரி, மாவட்ட தீயணைப்பு மற்றும் மீட்பு பணி அதிகாரி உள்ளிட்ட குரூப் 1 பதவியையும், குரூப் 2, குரூப் 4, வி.ஏ.ஓ., உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கான தேர்வை நடத்தி வருகிறது.முதலில் தேர்வுக்கு விண்ணப்பிக்க தேர்வர்களுக்கு விண்ணப்பம் வழங்கப்பட்டு வந்தது.

அந்த முறை மாற்றப்பட்டு ஆன்லைன் மூலம் மட்டுமே தேர்வுக்கு விண்ணப்பிக்கும் புதிய முறை கொண்டுவரப்பட்டது. தற்போது அனைத்து தேர்வுகளும் ஓஎம்ஆர் தாளில் கொள்குறி (டிக் அடிக்கும் முறை) வகையில் தேர்வர்கள் எழுதி வருகின்றனர்.  இந்த நிலையில் அதிரடியாக எழுத்து தேர்வை கணினி மூலம் நடத்த டிஎன்பிஎஸ்சி திட்டமிட்டுள்ளது. இதற்கான முயற்சியில் டிஎன்பிஎஸ்சி மும்முரமாக இறங்கியுள்ளது. இதன் ஒரு பகுதியாக தேர்வு நடத்தும் பணிகளை தனியாரிடம் அளிக்க டிஎன்பிஎஸ்சி திட்டமிட்டுள்ளது.

கணினி மூலம் நடத்தப்படும் தேர்வுகளை நடத்துவதற்காக தனியாரிடம் ஒப்பந்த புள்ளியை டிஎன்பிஎஸ்சி கோரியுள்ளது. ஒப்பந்தபுள்ளியை ஆகஸ்ட் 2ம் தேதி மாலை3 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். டெண்டர் குறித்த விவரங்களை www.tenders.tn.gov.in, www.tnpsc.gov.inல் தெரிந்து கொள்ளலாம் என்றும் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. டிஎன்பிஎஸ்சியின் இந்த அறிவிப்புக்கு தேர்வு எழுதுவோர் மற்றும் கல்வியாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். டிஎன்பிஎஸ்சி தேர்வு எழுதுவோரின் எண்ணிக்கை ஒவ்வொருதேர்விலும் அதிகரித்து வருகிறது. குறைந்தப்பட்சம் ஒவ்வொரு தேர்வுக்கும் 10 லட்சத்திற்கும் அதிகமானோர் விண்ணப்பித்து வருகின்றனர். ஒரு பதவிக்கே சுமார் 250 பேர் போட்டியிடும் சூழ்நிலை நிலவி வருகிறது.

எப்படியாவது அரசு பணியை பிடித்து விட வேண்டும் என்ற எண்ணமே ஒவ்வொரு தேர்வுக்கும் விண்ணப்பிப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதை காட்டி வருகிறது. இந்த நிலையில் தனியாரிடம் ஒப்படைப்பதுமுறைகேடுக்கு வழிக்கும். அப்படி தனியாரிடம் ஒப்படைத்தால் தேர்வு எழுதி அரசு பதவியை பெற நினைப்பவர்களின் எண்ணம் கானல் நீராக போய் விடும் என்றும் சமூக ஆர்வலர்கள், தேர்வு எழுதுபவர்கள் எச்சரித்துள்ளனர். எனவே, தேர்வு நடத்தும் பணியை தனியாரிடம் ஒப்படைக்க கூடாது என்று டிஎன்பிஎஸ்சிக்கு அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.கிராமப்புற மாணவர்களுக்கு சிக்கல்: டிஎன்பிஎஸ்சி தேர்வு எழுதுபவர்களில் 20 முதல் 30 சதவீதம் பேருக்கு மட்டுமே கம்ப்யூட்டர் பயன்படுத்தும் வழக்கம் ெகாண்டவர்கள்.

கிராமங்கள், புறநகர்களில் இந்த வசதி இல்லை. எனவே, கிராமப்புற மாணவர்கள் மற்றும் ஏழை மாணவர்கள் இதற்காக பல ஆயிரங்களை செலவழித்து தேர்வு எழுத வேண்டியிருக்கும். காரணம் சில நூறு ரூபாய் கொடுத்து புத்தகம் வாங்கவே முடியாதநிலையில்தான் பல மாணவர்கள் தேர்வில் தோல்வி தழுவும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. முழு அளவில் கம்ப்யூட்டர் அறிவு இல்லாத மாநிலமான தமிழகத்தில் இதுபோன்ற திடீர் அறிவிப்புகள் மாணவர்கள், தேர்வர்கள், போட்டியாளர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.