tamil

20 லட்சம் போட்டியாளர்களுடன் இன்று குரூப்-4 தேர்வு தொடங்கியது...

Webdesk | Sunday, February 11, 2018 10:35 AM IST

  20 லட்சம் போட்டியாளர்களுடன் இன்று குரூப்-4 தேர்வு தொடங்கியது...

கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர், நில அளவையர் ஆகிய பதவிகள் அடங்கிய 9,351 காலிப்பணியிடங்களுக்கு தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி) தேர்வு அறிவிக்கை வெளியிட்டிருந்தது. தேர்வாணைய வரலாற்றிலேயே மிக அதிகமாக 20,69,274 பேர் விண்ணப்பித்திருந்தனர்.

ஒரு இடத்திற்கு 221 பேர் போட்டி என்ற நிலை இருக்கும் நிலையில் குரூப்-4 இன்று தொடங்கியது. மாநிலம் முழுவதும் 6,962 மையங்கள் தேர்வுக்காக அமைக்கப்பட்டுள்ளன. புதிய முயற்சியாக தேர்வர்களின் பெயர், புகைப்படம், பதிவெண், விருப்பப்பாடம் ஆகிய விபரங்கள் அச்சடிக்கப்பட்டுள்ள விடைத்தாள்கள் இன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.

இதன் மூலம், தவறான பதிவெண் எழுதுபவர்களுக்கு மதிப்பெண் குறைக்கும் நடவடிக்கை தவிர்க்கப்படும். மேலும், தேர்வு முடிவுகளை வெளியிடுவதில் கால அவகாசம் கணிசமாக குறையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்வு மைய கண்காணிப்பு மற்றும் இரத பணிகளுக்காக 1 லட்சத்து 25 ஆயிரம் ஆசிரியர்கள் மற்றும் அரசுப்பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

தேர்வு நடவடிக்கைகள் வீடியோ பதிவு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தேர்வர்கள் எளிதில் சென்று வர போக்குவரத்து ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. காலை 10 மணிக்கு தேர்வு தொடங்கிய நிலையில், மதியம் 1 மணிக்கு முடிய உள்ளது. அதன் பின்னர், எத்தனை பேர் தேர்வு எழுதினர் என்ற விபரங்கள் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.