tamil

அரசுப் பள்ளிகளில் பயோமெட்ரிக் முறையில் ஆசிரியர்களின் வருகை பதிவு

Webdesk | Thursday, May 31, 2018 8:28 AM IST

 அரசுப் பள்ளிகளில் பயோமெட்ரிக் முறையில் ஆசிரியர்களின் வருகை பதிவு

தமிழக சட்டசபையில் பள்ளிக்கல்வித் துறை மானியக் கோரிக்கை மீது எம்.எல்.ஏ.க்கள் விவாதித்தனர். அவர்களுக்கு பதிலளித்து அந்தத் துறையின் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பேசியதாவது:–

அரசுத் தேர்வில் தோல்வியுற்ற மாணவர்கள் உடனடியாக வரும் ஜூன் மாதத்திலே மீண்டும் தேர்வெழுதி தேர்ச்சி பெறலாம். அதிலும் தவறும் மாணவர்களுக்காக அவர்கள் பயின்ற பள்ளியிலேயே மீண்டும் பயில்வதற்கு அரசு பரிசீலனை செய்து வருகிறது.தற்போது தரப்படும் மதிப்பெண் சான்றிதழ்கள், எளிதில் தீப்பிடிக்காத, கிழியாத வகையில் உள்ளன. ரூபாய் நோட்டுகளில் இருப்பதுபோல 11 ரகசிய குறியீடுகள் கொண்ட பாதுகாப்பு அம்சங்கள்கூடிய மதிப்பெண் சான்றிதழில் தமிழ் மற்றும் ஆங்கிலத்திலும் மாணவர்களின் பெயர் இடம்பெற்றுள்ளது.

1, 6, 9 மற்றும் 11 வகுப்புகளுக்கு 2018–2019–ம் ஆண்டுக்கான புதிய பாடத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இது கல்வியாளர்கள் பாராட்டும் வகையில் அமைந்துள்ளது. மூன்று ஆண்டுகளில் அனைத்து வகுப்புகளுக்கும் புதிய பாடத்திட்டம் என்ற இலக்கை, இந்த ஆண்டிலேயே அடையத் தீர்மானித்து பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன.

மேல்நிலை வகுப்புகளில் மொழிப்பாடங்களில் உள்ள தாள் 1 மற்றும் 2 ஆகியவற்றை ஒரே தாளாக மாற்றியமைக்க அரசு பரிசீலித்து வருகிறது.நீட் தேர்வுக்கு 412 பயிற்சி மையங்கள் அமைக்கப்பட்டன. உணவு மற்றும் தங்கும் வசதிகளுடன் 9 பயிற்சி மையங்கள் ஏற்படுத்தப்பட்டு, 26 நாட்களுக்கு, ஸ்பீடு, சைதன்யா, ஆலன் போன்ற சிறந்த நிறுவனங்களுடன் பயிற்சிகள் வழங்கப்பட்டன. இதன்மூலம், மருத்துவ நுழைவுத் தேர்வை மாணவர்கள் எளிதாக எதிர்கொண்டனர்.

தமிழகத்தில் கடந்த ஆண்டு 150 நடுநிலைப் பள்ளிகளும், 100 உயர்நிலைப் பள்ளிகளும் தரம் உயர்த்தப்பட்டன. இந்த ஆண்டு 100 நடுநிலைப் பள்ளிகளை உயர்நிலைப் பள்ளிகளாகவும், 100 உயர்நிலைப் பள்ளிகளை மேல்நிலைப் பள்ளிகளாகவும் தரம் உயர்த்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.மக்கள் தொகை அதிகமுள்ள பள்ளிகள் இல்லாத குடியிருப்புப் பகுதிகளில் 20 புதிய தொடக்கப் பள்ளிகள் தொடங்கப்பட்டுள்ளன. பள்ளிக்கூடங்களில் 4,362 ஆய்வக உதவியாளர் பணியிடங்களும் 2,373 முதுகலை ஆசிரியர் பணியிடங்களும் நிரப்பப்பட்டுள்ளன.

128 பள்ளிகளுக்கு ரூ.1 கோடியே 92 லட்சம் செலவில் புதுமைப்பள்ளி விருது வழங்கப்பட உள்ளது. அதனடிப்படையில் தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளுக்கு 1 லட்சம் ரூபாயும், உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளுக்கு ரூ.2 லட்சமும் வழங்கப்படும்.அதுபோல 192 ஆசிரியர்களுக்கு ரூ.10 ஆயிரம் வீதம் ரூ.19.2 லட்சம் செலவில் பாராட்டுச் சான்றிதழுடன் கூடிய கனவு ஆசிரியர் விருது வழங்கப்படவுள்ளது.

அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் தமிழ்வழிக் கல்விப் பயிலும் 10 மற்றும் 12–ம் வகுப்பு பயிலும் மாணவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக பெருந்தலைவர் காமராஜர் விருது வழங்கப்பட உள்ளது. மாவட்டத்திற்கு 30 மாணவர்கள் என மொத்தம் 960 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு விருது வழங்கப்பட உள்ளது.8 முதல் 12–ம் வரை பயிலும் மாணவர்கள் அறிவியல், தொழில்நுட்பம், கலை மற்றும் இலக்கியம் ஆகிய ஒவ்வொரு துறையிலிருந்தும் தலா 25 மாணவர்கள், 2 ஆசிரியர்கள் மற்றும் ஒரு பணியாளர் வீதம் மொத்தம் 112 பேர் ரூ.3 கோடி செலவில் வெளிநாட்டு கல்விச்சுற்றுலா அனுப்பி வைக்கப்படுவார்கள்.

தற்போது முதல்கட்டமாக, பின்லாந்து அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டு 50 மாணவர்கள் அறிவியல், தொழில்நுட்பம் ஆகிய துறைகளில் பின்லாந்து, சுவீடன் அழைத்துச் செல்ல ஏற்பாடு நடைபெற்று வருகிறது.பள்ளிக் கல்வித்துறையின் செயல்பாடுகளை எளிமைப்படுத்துவதற்காக அதன் நிர்வாகத்தில் பல்வேறு சீர்திருத்தங்களை மேற்கொண்டு 68 மாவட்ட கல்வி அலுவலகங்கள் நிர்வாக வசதிக்காக 120 மாவட்ட கல்வி அலுவலகங்களாக உயர்த்தப்பட்டுள்ளன.

ரூ.200 கோடி செலவில் அரசுப் பள்ளிகளில் கூடுதல் வகுப்பறைகள், தளவாடங்கள், ஆய்வகங்கள், நூலகங்கள், கழிப்பறைகள், குடிநீர்வசதி மற்றும் சுற்றுச்சுவர் ஏற்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.பள்ளிகளில் தூய்மைப் பணிகளை 100 நாள் வேலை வாய்ப்புத் திட்டப் பணியாளர்களைக் கொண்டு மேற்கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது.

சென்னையில் பள்ளிக் கல்வி இயக்கக டி.பி.ஐ. வளாகத்தில் எம்.ஜி.ஆரின் நினைவைப் போற்றும் வகையில் அவர் பெயரில், ஒரு லட்சம் சதுரஅடி பரப்பளவில் ரூ.39.90 கோடி மதிப்பீட்டில் ஒருங்கிணைந்த கல்வித் துறைக்கான கட்டிடம் கட்டும் பணிகள் தற்போது தொடங்கப்பட்டுள்ளன.3 ஆயிரத்து 90 உயர்நிலைப் பள்ளிகளில் 10 கணினிகளுடனும், 2 ஆயிரத்து 939 மேல்நிலைப் பள்ளிகளுக்கு 20 கணினிகளுடனும் கூடிய ஹைடெக் ஆய்வகம் ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. 3 ஆயிரம் பள்ளிகளில் ஒரு பள்ளிக்கு தலா ரூ.2 லட்சம் வீதம் ரூ.60 கோடி செலவில் ஸ்மார்ட் கிளாஸ் ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இந்தியாவிலேயே முதன்முறையாக தமிழக அரசுப் பள்ளிகளில் உலகத்தர தொழில்நுட்பத்தோடு ரோபாடிக் பயிற்சி வகுப்புகள் மற்றும் திறன் மேம்பாட்டு பயிற்சிகள் தொடங்க பரிசீலித்து வருகிறது.கடைசியாக எடுத்த புள்ளி விவரத்தின்படி, இந்தியாவின் எழுத்தறிவு நிலை 74.04 சதவீதமாகும். தமிழகத்தின் எழுத்தறிவு சதவீதம் 80.3 ஆகும். தற்போதும்கூட, பள்ளிகளே இல்லாத பகுதிகளில் 20 புதிய தொடக்கப் பள்ளிகள் திறந்து அரசு சாதனை புரிந்துள்ளது. 2020–ம் ஆண்டிற்குள் நூலகங்களில் ஒரு கோடி உறுப்பினர்கள் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்படும். உலகத் தமிழ்ச் சங்கம் கண்ட மதுரையில் ரூ.6 கோடி மதிப்பில் மாபெரும் நூலகம் அமைக்க ஆவன செய்யப்பட்டுள்ளது.இவ்வாறு அவர் பதிலளித்துப் பேசினார்.